வலம்புரிவிளை குப்பைகிடங்கில் இன்று காலை பயங்கர தீ: புகை மூட்டத்தால் பொது மக்கள் பாதிப்பு, 5 வண்டிகளில் தீயை அணைக்கும் பணி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி வலம்புரிவிளை குப்பை கிடங்கில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 5 வண்டிகளில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் பீச்ரோடு ஜங்சன் பகுதியில் உள்ள வலம்புரிவிளை குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இடம் கிடைக்காததால், தற்போது பயோமைனிங் முறையில் குப்பைகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதேபோல் மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகரில் உள்ள 11 நுண்ணுரம் செயலாக்கம் மையங்கள் மூலம் உரமாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வலம்புரிவிளை குப்பைகிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இதனை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வலம்புரிவிளை உரக்கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளித்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயின் வேகம் அதிகரிப்பால் கன்னியாகுமரி, திங்கள்சந்தை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது தீயை அணைக்கும் பணியில் குமரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்யகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர்களும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.  இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் பகவதிபெருமாள், சத்தியராஜ், மற்றும் கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் தீயணைப்பு பணியை பார்வையிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.