வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கார் மோதி, அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு எம்ஜிஆர் நகரை சேர்ந்த சாமு மகன் ரபீக் (13), 8ம் வகுப்பும், ராஜி மகன்கள் விஜய் (3) 8ம் வகுப்பும், சூர்யா (11) 6ம் வகுப்பும் கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். விஜய், சூர்யா ஒரு சைக்கிளிலும், ரபீக் மற்றொரு சைக்கிளிலும் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், வேலூர் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 7 பேர் ஏலகிரிக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் சென்றுள்ளனர். காரை சந்தோஷ் என்ற மாணவர் ஓட்டி சென்றுள்ளார்.
அந்த கார், வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை தாண்டி வெளியே சர்வீஸ் சாலையில் சென்ற மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சைக்கிள்களுடன் தூக்கி வீசப்பட்ட மாணவர்கள் 3 பேரும், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் மீது மோதிய கார் சாலையோர மரத்தின் மீது மோதி நின்றது. இதை பார்த்த அப்பகுதியினர் வந்து காரிலிருந்த மாணவர்கள் 3 பேரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிந்து கார் ஓட்டி வந்த சந்தோஷை கைது செய்தனர். திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்எல்ஏ ேதவராஜ் உட்பட பலர் நேரில் சென்று மாணவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். மாணவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் எ.வ.வேலு தலா ரூ.1லட்சத்தை எம்எல்ஏ தேவராஜ் மூலம் வழங்கினார். மக்கள் மறியல்: விபத்தில் பலியான மாணவர்களின் உறவினர்கள், அப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
* மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வளையாம்பட்டு கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிரிசமுத்திரம் அரசு பள்ளிக்கு நேற்று காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த வளையாம்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த ரபிக் (13), விஜய் (12), சூர்யா (10) ஆகிய மூன்று மாணவர்கள் கார் மோதி உயிரிழந்த துயரமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.