வாணியம்பாடி: தறிக்கெட்டு ஓடி மோதிய கார் – பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியான பரிதாபம்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலிருக்கும் வளையாம்பட்டு எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 13 வயதே ஆன ரஃபீக், விஜய், சூர்யா ஆகிய மூன்று மாணவர்களும், அருகிலிருக்கும் கிரிசமுத்திரம் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம்போல், சைக்கிளில் மூன்று பேரும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேலூரில் இருந்து சுற்றுலா தலமான ஏலகிரி மலைக்கு அதிவேகமாகச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு, எதிரே சைக்கிளில் வந்த மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், மூன்று மாணவர்களும் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு, கீழே விழுந்தனர். இந்த கோர விபத்தில், பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே மாணவர்கள் மூன்று பேரும் துடிதுடித்து மரணித்தனர்.

விபத்து பகுதியில் திரண்ட மக்கள்

விபத்து ஏற்படுத்திய கார் கர்நாடக மாநில பதிவெண் கொண்டது. காருக்குள் 8 பேர் பயணித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே வேலூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது. 8 பேரும் லேசான காயத்துடன் உயிர்த் தப்பினர். சம்பவ இடத்தில் திரண்ட பொது மக்களும், மாணவ-மாணவிகளும் கதறி அழுது கொண்டே விபத்துகளை குறைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்ததும், வாணியம்பாடி தாலுகா போலீஸார் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சம்பவம், வாணியம்பாடி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன், வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி, திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணன், வாணியம்பாடி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்குமார் உள்ளிட்டோர், மருத்துவமனைக்கு விரைந்துச் சென்று மாணவர்களின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.