திருப்பத்தூர் : வாணியம்பாடியில் கார் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவாதத்தில், விபத்தை ஏற்படுத்திய கலோரி மாணவன் சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி அதி வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து, வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு அருகே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த 3 பள்ளி மாணவர்கள் மீது வேகமாக மோதி கொடூர விபத்துக்குள்ளானது.
இந்த கொடூர விபத்தில் 8ம் வகுப்பு படிக்கும் ரபீக், விஜய் மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் சூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய காரில் பயணித்தவர்களை கிராம பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த 3 மாணவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பொதுமக்களிடமிருந்து காரில் பயணித்தவர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த இந்த சம்பவத்தில், காரை ஓட்டி வந்த தனியார் கல்லூரி மாணவன் சந்தோஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.