புதுடில்லி, கோடையில் ஏற்படும் வெப்ப அலையை சமாளிப்பது குறித்த அறிவுறுத்தல்களை மத்திய சுகாதார அமைச்கம் வெளியிட்டுள்ளது.
வழக்கமாக மார்ச் மாதத்திலிருந்து தான் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி மாத துவக்கத்திலேயே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்தாண்டும் சில மாநிலங்களில் பிப்ரவரியிலேயே கடும் வெயில் அடித்தது. இதன் காரணமாக பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அடுத்து வரும் மாதங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோடை வெப்பத்தை சமாளிப்பதற்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என சில அறிவுறுத்தல்களை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
* வீட்டிலேயே தயாரிக்கப்படும் எலுமிச்சை சாறு போன்ற பழச்சாறுகளை அருந்தலாம்.
* தளர்வான உடைகளை அணிவது நல்லது. கதராடைகளை அணிவதன் வாயிலாக வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
* பகல் நேரத்தில் வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் குடை எடுத்துச் செல்லலாம். தொப்பி அணிந்து செல்வது நல்லது.
* நாம் இருக்கும் இடத்தை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் நேரடியாக படும் திசையில் ஜன்னல் அமைந்திருந்தால், அதை பகல் நேரத்தில் மூடி, இரவு நேரத்தில் மட்டும் திறந்து வைக்கலாம்.
* புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* டீ, காபி, மதுபானம் ஆகியவற்றை அடிக்கடி அருந்துவதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகம் கலந்த பானங்களையும் தவிர்க்க வேண்டும்.
* வெப்பம் அதிகமாக இருக்கும் பகல், 12:00 – 3:00 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
* சமையல் அறையை காற்றோட்டமாக வைத்திருப்பது கட்டாயம். வெப்ப நேரத்தில் சமையல் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* குழந்தைகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை கவனமாக பார்த்துக் கொள்வதுடன், அவர்களை வெயில் நேரத்தில் வெளியில் அழைத்துச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* வெயில் நேரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகில் குழந்தைகள், செல்லப் பிராணிகள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாகனத்தின் இன்ஜின் பகுதியில் உள்ள அதிகப்படியான வெப்பம், சில நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்தும்.
* தலைச்சுற்றல், மயக்கம், குமட்டல், தலைவலி, வழக்ககத்துக்கு மாறாக அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல், சுவாச பிரச்னை ஆகியவை இருந்தால், மருத்துவர்களை அணுக வேண்டும்.
* வெப்ப காலத்தில் ஏற்படும் நோய்களை சமாளிக்கவும், அவற்றுக்கு சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனைகளில் போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்