புதுதில்லியில் நடைபெறவுள்ள புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, 2023 மார்ச் 02 – 04 வரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த மாநாடு, இந்திய வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பார்வையாளர் ஆய்வு அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்படுகின்றது.
இம் மாநாட்டின் போது, 2023 மார்ச் 03ஆந் திகதி நடைபெறவுள்ள ‘பிளவுபட்ட உலகை குணப்படுத்துதல்’ (Healing a Divided World) மற்றும் ‘வாக்குறுதியின் பைட் அலகுகள்: தொழில்நுட்பம் எவ்வாறு சமூகங்களை உயர்த்துகின்றது’ (Bytes of Promise: How can Technology Lift Communities) ஆகிய தலைப்புக்களிலான இரண்டு விஷேட குழு விவாதங்களில் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்.
மாநாட்டின் பக்க அம்சமாக, பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வழிகளில் கவனம் செலுத்தும் இருதரப்புக் கலந்துரையாடல்களுக்காக அமைச்சர் பல நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 பிப்ரவரி 28