புதுடில்லி, ‘சட்டசபை கூட்டத்தை கூட்டும்படி மாநில அமைச்சரவை முடிவு எடுத்து பரிந்துரை செய்தால், அதையேற்று சட்ட சபையை கூட்ட, கவர்னர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
‘இந்த பிரச்னையில் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர். அதேநேரத்தில், கவர்னர் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு சட்டசபை கூட்டத் தொடரை கூட்ட மாநில அரசு முடிவு செய்தது. இதற்கான உத்தரவை பிறப்பிக்கும்படி கவர்னருக்கு, மாநில அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பான சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டதாகவும், இது தொடர்பாக முதல்வர் முறையான பதில் அளிக்கவில்லை என்றும் கூறி, கூட்டத்தொடரை கூட்டுவதற்கான உத்தரவை பிறப்பிப்பதில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தாமதித்து வந்தார்.
குறிப்பாக, இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பகவந்த் மான் தெரிவித்த கருத்துகள் சட்டவிரோதமானவை என்றும் கவர்னர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ‘சட்டசபை கூட்டத்தொடரை கூட்டுவதற்கான உத்தரவை பிறப்பிக்கும்படி கவர்னருக்கு அறிவுறுத்த வேண்டும்’ எனக் கோரி, மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கவர்னர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”பஞ்சாப் சட்ட சபையை நாளை மறுநாள் கூட்டுவதற்கு கவர்னர் உத்தரவு பிறப்பித்து விட்டார். எனவே, இந்த மனுவை தொடர்ந்து விசாரிக்க வேண்டியது இல்லை,” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
நாம் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஒரு விஷயம் தொடர்பாக மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.
ஆனால், அரசியல் அமைப்பு சட்டப்படி நாம் செயல்பட வேண்டும்.
சட்டசபை கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக மாநில அமைச்சரவை ஒரு முடிவை எடுத்து, அது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரைத்தால், அதை கவர்னர் ஏற்க வேண்டும்.
அமைச்சரவை முடிவை ஏற்று, சட்டசபையை கூட்ட கவர்னர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; இதற்கு கவர்னர் கடமைப்பட்டவர். நம் அரசியல் அமைப்பு சட்டப்படி கவர்னர் என்பவர், எந்த ஒரு அரசியல் கட்சியையும் சேராதவர்.
அரசமைப்பு கடமையை நிறைவேற்றுவதில், முதல்வருக்கும் சம பங்கு உள்ளது. கவர்னர் கேட்கும் தகவல்களை முதல்வரின் அலுவலகமோ அல்லது சம்பந்தப்பட்ட செயலரோ, பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்