புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவும், வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளரும், சென்னை திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். பஞ்சாப் மாநில ஆளுநரான பன்வாரிலால் புரோகித் இல்ல திருமண விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது, தமிழக நலன்சார்ந்த கோரிக்கைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார்.
இந்த சந்திப்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் குறித்து அவர் என்னிடம் விசாரித்தார். பிரதமரிடம் மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினேன். குறிப்பாக அடுத்தமுறை கேலோ இந்தியா விளையாட்டை தமிழகத்தில் நடத்த வேண்டும். ஒன்றிய அரசின் துறைகளில் அதாவது என்.எல்.சி நிறுவனம் உட்பட அனைத்திலும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதேப்போன்று முக்கியமாக நீட் தேர்வு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தேன். இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு, மனநிலை ஆகியவை தொடர்பாகவும் பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தேன்.
அதனை கேட்ட பிரதமர் ஒரு சில விளக்கங்களை தெரிவித்தார். அதனை கேட்டுக்கொண்ட நான் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரையில் அதுதொடர்பான திமுகவின் சட்டப்போராட்டம் என்பது தொடரும் என தெளிவாக கூறினேன். அனைத்தையும் பிரதமர் கவனமுடன் கேட்டுக் கொண்டார். மேலும் பிரதமர், தமிழகத்தின் விளையாட்டுத்துறையை பற்றி கேட்டார். அதற்கு பதிலளித்த நான், இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) கிளையை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். தமிழகத்தில் மாவட்டம் தோறும் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பான திட்டம் உள்ளது இருக்கிறது எனவும் தெரிவித்து, அதற்கான போதிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். அதனை பரிசீலிப்பதாக கூறினார். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று அவர் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
* ஒன்றிய அமைச்சர் கிரிராஜூடன் சந்திப்பு
டெல்லியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிற ஊரக வளர்ச்சி துறை திட்டங்கள், மகளிர் மேம்பாட்டு திட்டங்கள், திறன் மேம்பாடு திட்டங்கள் மற்றும் வழங்கப்படுகிற பயிற்சிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் செயல்படுத்தபட்டு வருகிற திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் வழங்குதல் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவன மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.