தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் அழகர் ராஜா. இவர் ராணுவத்தில் வேலைக்கு சேர்வதற்காக முயற்சி செய்து வருகிறார். இவருக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த தாமோதரன் என்பவர் மூலம் கோவை ,மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் அறிமுகமானார்.
அப்போது மனோஜ் பிரபாகர் அழகர் ராஜாவிடம் எனக்கு அரசு துறையில் அதிகாரிகளின் பழக்கம் இருக்கிறது. அவர்களிடம் பேசி உங்களுக்கு ராணுவத்தில் உயர் பதவி வாங்கி தர முடியும் என்று ஆசை வார்த்தையை கூறி வந்துள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய அழகர் ராஜா, தனக்கு மட்டுமல்லாமல், எங்கள் பகுதியில் மேலும் மூன்று வாலிபர்களுக்கு வேலை பெற்று தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திய மனோஜ் கூட்டாளிகளுடன் சேர்ந்து நான்கு பேரிடமும் ரூ.30.85 லட்சம் வரை பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் கூறியது போல் ராணுவத்தில் வேலை வாங்கி தராமல் மோசடி செய்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட நான்கு பேரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் படி, போலீசார் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.