தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி உரிமத்தை தனியாருக்கு விட எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வைகை அணை நீர்த்தேக்கம் 10 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. வைகை அணை நீர்த்தேக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்துறை மூலம் கட்லா, மிருகால், ரோகு வகை மீன் குஞ்சுகள் லட்சக்கணக்கில் விடப்படுகிறது.
மீன் குஞ்சுகள் வளர்ந்த பின் பதிவுபெற்ற மீனவர் சங்க உறுப்பினர்கள் மூலம் பிடிக்கப்பட்டு மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்து அரசின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. பதிவு பெற்ற 115 பரிசல்கள் மூலம் 230 மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். பிடிபடும் மீன்களில் குறிப்பிட்ட அளவு மீனவர்களுக்கு சம்பளமாக கிடைக்கும் .
இந்நிலையில் வைகை அணையில் மீன் பிடிக்கும் குத்தகையை தனியாருக்கு விடும் நடவடிக்கை அரசு மேற்கொண்டுள்ளது. தனியாருக்கு விடுவதால் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், அரசின் முடிவை கைவிட வலியுறுத்தியும் மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 100 கணக்கான மீனவர்கள் கலந்துகொண்டனர். குடிநீர் விநியோகம் அடியோடு பாதிக்கப்படும் என்பதால் வைகை அணையில் மீன்பிடி தொழிலை அரசே தொடர்ந்து நடத்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வைகை அணையில் மீன்பிடிக்கும் உரிமத்தை அரசிடமிருந்து தனியாருக்கு மாற்றினால் 5 மாவட்ட விவசாயிகள் பாதிக்கபடுவார்கள் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வைகை அணை தண்ணீர் முழுவதும் மாசடையும் என்றும் மதுரை மாநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்றும் மீனவர்கள் கூறியுள்ளனர்.