மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த என் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில், ஆணையம் குறிப்பிட்டுள்ள விபரங்கள் தவறானவை. ஆணையம் என்னை சாட்சியாக மட்டுமே அழைத்தது. ஆனால், இறுதி அறிக்கையில் என் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சட்ட விதிகளுக்கு முரணானது. எனவே, ஆணைய அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கவும், ஆணைய அறிக்கைக்கும் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து இடம் பெற்றுள்ள பகுதிக்கும், அதனை பயன்படுத்தவும் இடைக்காலத் தடை விதித்து, தமிழ்நாடு அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.