வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், தமிழக இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மை பணியாளரை ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால், துாய்மை பணியாளர் ரத்தக்காயமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், அந்த இளைஞர் கத்தியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார். அங்கு சிட்னி போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இரண்டு போலீசார் அந்த இளைஞரை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், நெஞ்சில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில், படுகாயமடைந்த அந்த இளைஞரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது இளைஞரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சிட்னி போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த சையது அகமது மகன் முகமது ரஹமத்துல்லா,32, என்பதும், பிரிட்ஜிங் விசாவில், கடந்த 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு வந்து, உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முகமது ரஹமத்துல்லாவால் தாக்கப்பட்ட காயமடைந்த துாய்மை பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், தமிழக இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement