இந்திய பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு 4 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். இவர்களில் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி. பிரதமர் மோடியின் குடும்பத்தினரில் யாரும் அரசியலில் முக்கிய பதவிகளில் இல்லை. பிரகலாத் மட்டும் அகில இந்திய நியாய விலை கடை பணியாளர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
தெய்வ நம்பிக்கை அதிகம் உடைய பிரகலாத் மோடி, குடும்பத்தினருடன் நாடு முழுவதும் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை பகுதிகளிலுள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்தார். சென்னையில் தங்கி ஓய்வெடுத்த பிரகலாத் மோடிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள அப்பலோ மருத்துவமனையில் பிரகலாத் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுநீரகப் பிரச்னை இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளதாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.