2022-ம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க ஆதரவுடன் நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா வான்வழி மற்றும் தரை வழி தாக்குதலைத் தொடங்கியது. அப்போது தொடங்கிய போர், ஓராண்டு கடந்துவிட்டாலும், முடிவதாகத் தெரியவில்லை. இந்த போரின் மூலம் உக்ரைன் பெறும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறது, ரஷ்யாவின் பொருளாதாரம் கடும் சேதாரத்தைச் சந்தித்துள்ளது. இரு நாடுகள் மட்டுமின்றி மறைமுகமாக பல்வேறு உலக நாடுகள் பொருளாதார ரீதியில் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகிறது.
உக்ரைன் மீது உக்கிரமாகப் போர் தொடுக்கும் ரஷ்யாவின் பக்கம் சீனா இருப்பதையும், உருக்குலையும் உக்ரைன் பக்கம் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இருப்பதையும் கவனிக்க வேண்டும், பொதுப் பார்வையில் இது ரஷ்யா உக்ரைன் போராக இருந்தாலும் ரஷ்யாவின் பின் சீனாவும் உக்ரைனுக்குப் பின்னால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இருந்து, போர் நடக்கத் தொடர்ந்து ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்வதாகச் சொல்லி ரஷ்யா, சீனா மீதான பழைய பகையைத் தீர்த்துக் கொள்ள முனைவதாகவும், ஆகவே போர் நிறுத்தம் குறித்துச் சிந்திக்காமல் உக்ரைனுக்கு ஆயுத, பொருளாதார உதவிகள் செய்து போரை வெற்றி நடைபோட வைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய உக்ரைன் போர் தொடரும் நிலையில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க அதிபர் உக்ரைன் வருகை தந்திருந்தார், மேலும் உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவிகளை தொடஎந்து வழங்கி வருவதாக தெரிவித்தார்
உக்ரைன் பக்கம் நிற்கும் ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் ஆயுத உதவியை வழங்கி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் உக்ரைன் கொடிகளை ஏந்திக் கொண்டு ஆயுத உதவிகளை வழங்கி போரை வளர்க்காமல் போரை நிறுத்த கோரி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மூன்றாம் உலகப்போர் வேண்டாம். அமைதி வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர். போர் நிறுத்தத்திற்குக் கையெழுத்து இயக்கமும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில், “உக்ரைன் போரை நாங்கள் தவிர்க்கவே முயன்றோம், ஆனால் மேற்கத்திய நாடுகள் முதுகில் குத்தியதால் அமைதியாகத் தீர்வு காண முடியாத சூழலில் போர் தொடர்கிறது. போரைப் பொறுத்தவரை ரஷ்யா முன்னேறி வருகிறது, ரஷ்யாவின் இயற்கை வளங்களைத் திருட மேற்கத்திய நாடுகள் முயல்கிறது” என்றார். மேலும் “கிழக்குப் பகுதியில் நேட்டோவை விரிவுபடுத்த எந்த காரணமும் இல்லை. இந்த விஷயத்தில் மேற்கத்திய நாடுகள் பெறும் தோல்வி அடைந்துள்ளது” என்றார்
“மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு அளித்த வாக்குறுதியான நிதி, ஆயுத உதவிகளை முறையாகச் செய்தால் ரஷ்ய படைகளை நாங்கள் பின்னுக்குத் தள்ளி நாங்கள் வெற்றி பெறுவோம். ஆனால் மேற்கத்திய நாடுகள் முழுமையான உதவிகளைச் செய்ய மறுக்கின்றன, அவர்கள் உதவினால் எங்கள் வெற்றியைத் தடுக்க இயலாது” என பேசியுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வராமல், உக்ரைனுக்கு ஆதரவான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஓரணியிலும் ரஷ்யா உள்ளிட்ட அதன் ஆதரவு நாடுகள் மற்றொரு அணியிலும் தாக்கிக் கொள்ளத் தொடங்கினால், அது உலகப்போரை நோக்கி தான் செல்லும் என எச்சரிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். போர் தொடங்கியது முதலே கோதுமை, சோளம், கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்திருக்கின்றன. எனவே, ரஷ்யா-உக்ரைன் போரால் உலக அளவில் சுமார் 170 கோடி மக்கள் பசி, பட்டினி போன்ற வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என ஐ.நா தரப்பில் சொல்லப்பட்டுள்ளது
தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையும். ‘நாம் போரை முடித்துக் கொள்ளாவிட்டால், போர் நம்மை அழித்துவிடும்’ என்ற சொல்லாடல்தான் நினைவுக்கு வருகிறது. தற்போதைய அவசர தேவை என்பது போர் நிறுத்தம். ரஷ்யா உக்ரைன் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வித்திட்டு, உடனடியாக போர் நிறுத்தப்படுவது தலையாய தேவையாக இருக்கிறது.