“உங்களுக்கு மில்லியன் நன்றிகள்”-மிஷ்கின் உடனான படப்பிடிப்பு அனுபவம் குறித்து லோகேஷ் ட்வீட்

‘லியோ’ படப்பிடிப்பில் நடந்த அனுபவங்கள் குறித்து இயக்குநர் மிஷ்கின் நெகிழ்ச்சியுடன் சமூகவலைத்தளத்தில் கடிதம் ஒன்றை எழுதியிருந்த நிலையில், அதற்கு லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பாலிவுட் நடிர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானலை அடுத்து தற்போது காஷ்மீரில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ‘லியோ’ படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்டு சென்னை திரும்புவதாக தெரிவித்த இயக்குநர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில், “இன்று காஷ்மீரிலிருந்து சென்னை திரும்புகிறேன்… மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட ‘Leo’ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். Assistant director-களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.

என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்தப் படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். ‘Leo’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்று மிஷ்கின் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மிஷ்கினின் பதிவுக்கு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களுடன் இவ்வளவு நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாகவும், அதிர்ஷ்டமானவனாகவும் உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்த மில்லியன் முறை நன்றிகள் தெரிவித்தாலும் போதாது. படப்பிடிப்பில் நீங்கள் இருந்தது மிகவும் உற்சாகமாக இருந்தது. எவ்வளவு நன்றிகள் உங்களுக்கு சொன்னாலும் பத்தாது என்றாலும், மில்லியன் நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.