கடந்த 2016-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தார். இதையடுத்து அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளில் சசிகலாவும், டிடிவி தினகரனும் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் எடப்பாடி பழனிசாமியும் – ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பணியாற்றி வந்தனர். பிற்காலத்தில் அவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டது. குறிப்பாக கடந்த ஜூலை 11-ம் தேதியில் நடைபெற்ற பொதுக்குழுவில் இருவருக்குமான பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
அதாவது கடந்த ஆண்டு ஜூன் 23, ஜூலை 11-ம் தேதிகளில் அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஜூலை 11-ம் தேதியில் நடைபெற்ற பொதுக்குழுவில் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மறுபுறம் பொருளாளர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இது ஓபிஎஸ்-க்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதாக அமைந்தது. பின்னர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கான தீர்ப்பு கடந்த 23-ம் தேதி வழங்கப்பட்டது. அதில், “அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வுசெய்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் செல்லும்” என தீர்ப்பளிக்கப்பட்டது.
இது எடப்பாடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் சாதகமாக அமைத்திருக்கிறது. மறுபுறம் ஓபிஎஸ்-க்கு இது மேலும் ஒரு சறுக்கலை கொடுத்திருக்கிறது. எனவே இதுஒருபுறம் இருக்க மறுபுறம் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் பிரியன், “சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த நேரத்தில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அந்த நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்கிறேன் என்று தெரிவித்தார். ஏனெனில் அனைவரும் ஒன்று பட வேண்டும் என்று தெரிவித்தார். அந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமியும் – ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இருந்தனர்.
மறுபுறம் டி.டி.வி.தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்துவிட்டார். இதனால் சசிகலா சொன்னதை கேட்க யாரும் தயாராக இல்லை. பின்னர் 2021-ல் நடந்த தேர்தலில் ஆட்சியை இழந்தனர். மேலும் சசிகலாவின், `நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர்’ என்ற வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அதில் என்ன மாதிரியான தீர்ப்பு வரும் என்பது தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பு சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பை தவிர வேறு யாரை வேண்டுமானுலும் சேர்த்து கொள்வேன் என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் சசிகலா தனியாக கட்சி தொடங்க வேண்டும் அல்லது டி.டி.வி.தினகரனின் அமமுக-வில் இணைய வேண்டும்.
நாட்டு நடப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டாலும் அவர்களை பிரபலப்படுத்துவதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு தான். ஏனெனில் சசிகலா கட்சி ஆரம்பித்தால், அது எந்த அளவுக்கு வாக்குளை பெற்று தரும் என்று தெரியவில்லை. எனவே இவருக்கு எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக இல்லை.
டி.டி.வி. தினகரனை பொறுத்தவரை அவர் தனி கட்சி ஆரம்பித்துவிட்டார். வரும் தேர்தலையும் தனியாக தான் சந்திப்பார். ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு தொடர்பான வழக்கில் இருக்கும் ஓட்டைகளை எடுத்து சட்ட போராட்டம் நடத்துவார்கள். ஆனால் அதில் பெரிய அளவுக்கு பலன் இருக்குமா என்று தெரியாது. அவர் எந்த இடத்தில் சண்டை போட வேண்டுமோ அங்கே போடவில்லை. எடப்பாடி பக்கம் இருப்பவர்கள் பாதி பேர் பிரிந்து ஓபிஎஸ் பக்கம் வந்தால் மட்டுமே அவரால் தைரியமாக சண்டை போட முடியும்.
அவ்வாறு வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான். எனவே இவருக்கு எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக இல்லை. இதேநிலை நீடித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தால் அதிமுகவுக்கு முழுமையாக வாக்கு கிடைக்காது. அப்போது அனைவரையும் சமாதானம் செய்ய பாஜக முயற்சி செய்யும். இதற்கு 2024-ல் தேர்தல் நெருங்கும் போது தான் விடை கிடைக்கும்” என்றார்.