நாகர்கோவில்: ‘கன்னியாகுமரியில் சிறிய அளவிலான விமானநிலையம் அமைய வாய்ப்புள்ளது’ என்று ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். ஒன்றிய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: புதிதாக 50 விமான நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சிறிய அளவிலான விமான நிலையம் அமைய வாய்ப்பு உள்ளது. மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியில் எந்தவித குறைவும் செய்யப்படவில்லை. 2047-ல் பொருளாதார ரீதியாக இந்தியா மிகச் சிறந்த நாடாக மாறும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு தேவையான கட்டுமானங்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழக திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரையில் இலங்கையில் உள்ள விவசாய நடைமுறைகள் நமக்கு பொருந்தாது. ரசாயன தன்மை குறைந்த உரங்களை பயன்படுத்த வேண்டும். 2014ல் இருந்து இதுவரை ஜாதி ரீதியான கலவரங்கள் ஏதும் வந்தது இல்லை, பாரதிய ஜனதாவிடம் வெறுப்பு அரசியல் இல்லை, பிரிவினை அரசியலும் பழக்கம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.