ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 3 பெட்டிகள் எரிந்து நாசகமாகின.
கிரீஸ் நாட்டின் தெஸ்ஸலே மாகாணத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் தப்பிய ஒருவர் கூறுகையில், “கிரீஸ் தலைநகர் ஏதென்ஸிலிருந்து நெசலோனிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. எதிர் மார்க்கத்தில் நெசலோனியில் இருந்து லாரிசா நகர் நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக நள்ளிரவு நேரத்தில் இந்த ரயில்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் 32 பேர் பலியாகினர்.விபத்து நேரிட்டபோது நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல் சத்தம் கேட்டது. நாங்கள் உயிர்பிழைப்போம் என்று நினைக்கவில்லை” என்றார்.
மாகாண ஆளுநர் அகோரஸ்டோஸ் கூறுகையில், “ரயிலில் 350 பேர் பயணித்தனர். விபத்தில் 32 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 250 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இரு ரயில்களும் மோதியதில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மீட்புப் பணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஊடே நடைபெறுகிறது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது” என்றார்.