சென்னை: “குழப்பமும், குளறுபடிகளும் நிறைந்த குருப்-2 தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துவதுதான் தேர்வாணையத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்யும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப்-2 தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில் இரண்டாம் நிலை அலுவலர்கள் முக்கியத்துவம் வாய்ந்த கடமைப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியவர்கள். இதற்கான தேர்வு மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
கேள்வித்தாள் வழங்கப்பட்டதில் தொடங்கி, பல ஏற்பாடுகளில் தேர்வாணையம் தவறுகளுக்கு இடமளித்துவிட்டதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தேர்வாணையத்தின் விளக்கமும் ஏற்கத்தக்க முறையில் இல்லை.
இந்த நிலையில், குழப்பமும் குளறுபடிகளும் நிறைந்த குருப்-2 தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துவதுதான் தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுதிபட வலியுறுத்தி, இதற்கான முறையில் சந்தேகத்தின் நிழல் படிந்துவிட்ட தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த வேண்டும் என பணியாளர் தேர்வாணையத்தையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய GROUP–2 தேர்வு பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதால், மறு தேர்வு நடத்திட வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில், GROUP–2 தேர்வின் முதன்மை தேர்வு கட்டாய தமிழ் மொழித் தாள், பொது அறிவுத் தாள் என இருதாள்களை உள்ளடக்கியது. இதில் வருகைப்பதிவேட்டில் இருந்த தேர்வர்களின் பதிவெண்கள் வரிசையிலும், வினாத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு முற்பகல் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்திருந்தது.