
பறவைக் காய்ச்சல் காரணமாக, சீனாவில் கோழிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோழி இறைச்சியின் விலை அங்கு பலமடங்கு அதிகரித்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் முகமது ரஹமதுல்லா சையத் அகமது என்ற தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர், தூய்மைப் பணியாளரை கத்தியால் குத்தியதுடன், காவலர்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, அவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

`கொரோனா வைரஸ் சீனாவின் வூஹானின் ஆய்வகங்களிலிருந்துதான் அநேகமாகப் பரவியிருக்கக் கூடும்’ என அமெரிக்க உளவு அமைப்பான FBI-ன் இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே (Christopher Wray) தெரிவித்திருக்கிறார்.

19 சீன போர் விமானங்கள், தைவானின் எல்லைப்பகுதி பாதுகாப்பு மண்டலத்துக்குள் பறந்ததாக, தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கிரீஸில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர், 85 பேர் படுகாயமடைந்தனர்.

ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் வேற்று மொழி சொற்கள் அதிகம் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவை அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்திருக்கிறார்.

இத்தாலியின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில், பெண்கள் குழந்தைகள் உட்பட ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 80 பேர் இறந்துவிட்டதாக, தாலிபன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளம் வயது கறுப்பின பேராசிரியராக ஜெசன் ஆர்டே என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜெசன் ஆர்டே தன்னுடைய 18 வயது வரை எழுத படிக்கத் தெரியாதவராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவில் கடுமையான உணவு பற்றாக்குறை / பஞ்சம் நிலவி வருகிறது. இதன் காரணமாக, விவசாய உற்பத்தியில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் முடிவுசெய்திருக்கிறார்.

ஹாங்காங்கில் 1,000 நாள்களுக்குப் பிறகு பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுநாள் வரை பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.