வாஷிங்டன்
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதவாக்கில் கொரோனா வைரஸ் உருவானது. பின்னர், உலகம் முழுவதும் பரவியது. அதன் தாக்கம் 2 ஆண்டுகளாக நீடித்தது
சீனாவில் உகான் நகரில் உள்ள ஹுனன் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா உருவானதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அதிகாரிகள் அடையாளம் கண்டறிந்தனர். கொரோனா உருவானது குறித்து கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது.
அதில், ஹுனன் மார்க்கெட்டில் வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக கண்டறியப்பட்டது. சீனாவில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரசை செயற்கையாக சீனா உருவாக்கியதாகவும் ஒரு கருத்து உலவுகிறது. இந்தநிலையில், விஞ்ஞானிகள் சிலர் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்று 3 ஆய்வுகளை நடத்தினர்.
அவற்றின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அவற்றில் 2 ஆய்வுகளில், உகான் நகரில் உயிருடன் பாலூட்டி ரக விலங்குகளை விற்கும் ஹுனன் மொத்த மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா பரவியதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் உகானில் உள்ள நுண்கிருமிகள் ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவால் தான் கொரோனா பரவியதாக அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது.
உலகையே சுமார் 2 ஆண்டுகள் முடக்கிய கொரோனா நோய் தொற்றுக்கான ஆரம்பப் புள்ளியாக சீனாவே இருந்ததாக எப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி வளாகங்கள், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையம் மற்றும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் உகான் இன்ஸ்டிடியூட் ஆப் உயிரியல் தயாரிப்பு ஆய்வகத்திலிருந்தே வைரஸ் பரவியிருக்கலாம் என்று எப்பிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிறிஸ்டோபர் ரே கூறியதாவது:-
எப்.பி.ஐயின் விசாரணையின் பெரும்பாலான விவரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன தொற்றுநோயின் தோற்றம் குறித்து ஆராய்வதில் சீன அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது கடினம்.
சீன அரசு அமெரிக்காவை குழப்பமடையச் செய்வதற்கு தன்னால் இயன்றதைச் செய்து வருவதாக எனக்குத் தோன்றுகிறது என கூறினார்.