கொள்ளிடம் அருகே கடலில் விடப்பட்ட 1,000 ரெட்லி ஆமை குஞ்சுகள்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே 1,000 ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர். மீனவர்களின் நண்பன் என அழைக்கப்படும் ஆலிவர் ரெட்லி ஆமைகள், கடலில் உள்ள  கழிவுகளை தின்று மீன்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. அழிவின் விளிம்பில் உள்ள  அரிய வகையான ஆலிவர் ரெட்லி ஆமைகள் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை  தமிழக கடற்கரைகளுக்கு வந்து முட்டையிட்டு மீண்டும் கடலுக்குச் சென்று  விடும்.

இந்த முட்டைகளை நாய், மனிதர்களிடமிருந்து பாதுகாக்க மயிலாடுதுறை  மாவட்ட வனத்துறையினர் சேகரித்து கூழையார், தொடுவாய் மற்றும் வானகிரி  பகுதியில் உள்ள மையங்களில் உள்ள பொரிப்பகத்தில் வைத்து  பாதுகாக்கப்படுகிறது. அங்கு ஆமை குஞ்சுகள் பொரிக்கப்பட்டவுடன் அதை கடலில்  விடப்பட்டு வருகிறது.  அதன்படி  மயிலாடுதுறை மாவட்ட கடற்கரை பகுதிகளில் 32 ஆயிரம் ஆலிவர் ரெட்லி ஆமை  முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து  வந்தனர். இந்த முட்டைகளில் இருந்து 2,500 ஆமை குஞ்சுகள் வெளிவந்துள்ளன.

இதில் முதற்கட்டமாக 1,000 ஆமை குஞ்சுகளை சீர்காழி வனத்துறையினர் நேற்று தொடுவாய் கடற்கரையில் கொண்டு வந்து கடலில் விட்டனர். ஒரே நேரத்தில்  விடப்பட்ட ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலை நோக்கி தவழ்ந்து சென்றதை மீனவர்கள் கண்டுகளித்தனர். இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக அளவு ஆமைகள்  மயிலாடுதுறை மாவட்ட கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு சென்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.