கோவையில் வெகு விமர்சையாக நடைபெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம்

கோவை: கோவையில் இன்று கோனியம்மன் கோவில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேரோட்டத்தை காண வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் பிற்பகல் 2:30 மணியளவில் திருத்தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது. தேர் நிலை திடலில் துவங்கிய இந்த தேரோட்டம் ஒப்பணக்கார வீதி வழியாக பிரகாசம் பகுதியை வந்தடைந்து, அதனைத் தொடர்ந்து பெரிய கடைவீதி வழியாக வைசியாள் வீதியை அடைந்து மீண்டும் தேர் நிலை திடலை வந்தடைந்தது. தேர் வலம் வரும் பகுதி முழுவதும் திரண்டு இருந்த பொதுமக்கள் உப்பை மற்றும் மிளகை வீசி அம்மனை வழிபட்டனர்.

தேரோட்டத்தை காண கோவை மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை புரிந்து தேரோட்டத்தை கண்டு மகிழ்ந்தனர். பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு நீர்மோர், பானகம், குளிர்பானங்கள், பழங்கள், உணவுகள் ஆகியவற்றை வழங்கினர். இதனிடையே ஒப்பணக்கார வீதி பகுதியில் உள்ள பள்ளிவாசலிலும் இஸ்லாமியர்கள் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினர். மதங்களை கடந்து அனைவரும் ஒற்றுமையாக நட்புறவுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வருடம் தோறும் அந்த பள்ளிவாசலில் பொதுமக்களுக்கு குடிநீர் மோர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

தேர் சுற்றி வரும் பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணிகளை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.