தமிழ்நாட்டில் கடந்த 2022 பிப்ரவரியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு பெரிதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேயர்கள், கவுன்சிலர்கள் என முதல்முறை அரசியல் தலைவர்கள் பலர் அதிகாரத்தில் அமர்ந்ததை பார்க்க முடிந்தது. அந்த வகையில் கோவை மாநகராட்சி மேயராக எளிய குடும்பத்தை சேர்ந்த கல்பனா ஆனந்தகுமாருக்கு அளிக்கப்பட்டது.
கவுன்சிலர்களின் கணவர்கள்
இதுதவிர அதிமுக,
காங்கிரஸ்
உள்ளிட்ட கட்சிகளிலும் பெண் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இதில் கவுன்சிலர்களின் கணவர்கள் தலையீடு இருப்பதாக அவ்வப்போது புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கறாரான உத்தரவை பிறப்பித்திருந்தார். இருப்பினும்
திமுக
உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் அத்துமீறல்கள் தொடர்வதாகவே தெரிகிறது.
திமுக நிர்வாகிக்கு சிக்கல்
அதற்கு உதாரணமாக கோவையில் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். திமுக நிர்வாகியாக செயல்பட்டு வரும் இவர், மாநகராட்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் இன்று மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் மனு ஒன்றை கொடுத்தார். அதில், தனக்கு சொந்தமான காலி இடத்தில் பல ஆண்டுகளாக சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருக்கிறது.
சாக்கடை பிரச்சினை
அங்கு வீடு கட்ட முடிவு செய்துள்ள நிலையில் சாக்கடையை அகற்ற திட்டமிட்டார். எனவே தன்னுடைய இடத்தில் உள்ள சாக்கடையை அகற்றி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுகுறித்து மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோரிடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டன.
முட்டுக்கட்டை போடும் காங்கிரஸ்
இதையடுத்து நேரில் வந்து ஆய்வு செய்து சாக்கடையை அகற்றுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்த சூழலில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் திடீரென உள்ளே நுழைந்து பணிகளை முடிக்க விடாமல் இடையூறு செய்கிறார். மாநகராட்சி அதிகாரிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். இதனால் என்னுடைய இடத்தில் அடுத்தகட்டமாக வேலைகள் எதுவும் செய்ய முடியவில்லை.
அமைதி வழி போராட்டம்
தன்னுடைய மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் காந்தி சிலை முன்பு அமர்ந்து அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கும் பேட்டி அளித்தார். சம்பந்தமே இல்லாமல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் கணவர் ஏன் தலையிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
அதிகரிக்கும் தலையீடு
திமுக நிர்வாகிக்கே இப்படி ஒரு நிலை என்றால் சாமானியர்களின் நிலை என்னவாகும் எனக் கேட்கின்றனர். இப்படி காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் கணவர் மட்டுமல்ல. மற்ற கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களின் கணவன்மார்களும் அவ்வப்போது அரசியல் ரீதியாக தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.