முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் என்ற புகைப்பட கண்காட்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று முதல் மார்ச் 12-ம் தேதி வரை நடக்கிறது. இந்த புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நெருங்கிய நட்பு என்று சொல்ல முடியாது. ஆனால் நட்பு இருந்தது. அது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை நாங்கள் இருவருமே பலமுறை நிரூபித்துக் கொண்டும் வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறோம். இங்குள்ள குறிப்பு புத்தகத்தில் நான் எழுதி வைத்திருப்பது என்னவென்றால், சந்தோசத்தையும் அனுபவித்து, சவால்களையும் ஏற்று, படிப்படியாக தொண்டராக, இளைஞர் அணி தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக, இன்று தமிழகத்தின் முதல்வராக என்று படிப்படியாக உயர்ந்து வருவது என்பது அவரது பொறுமையை மட்டுமல்ல திறமையையும் காட்டுகிறது என்று தெரிவித்தார்.