ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு தொடங்கியது; உலகை பேரழிவின் விளிம்பில் அமெரிக்கா வைத்துள்ளது: டெல்லி வந்த ரஷ்ய அமைச்சர் காட்டம்

டெல்லி: ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு தொடங்கிய நிலையில், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளதால், டெல்லியில் இன்றும், நாளையும் ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்றிரவு டெல்லி வந்தார். அவரை இந்திய அதிகாரிகள் குழு வரவேற்றது. அப்போது அவர் கூறுகையியில், ‘இந்தியாவின் ஜி-20 தலைமையை நாங்கள் ஆதரிக்கிறோம்.

அமெரிக்கா மற்றும் அவர்களுக்கு ஆதரவான நாடுகளின் கொள்கையானது உலகை பேரழிவின் விளிம்பில் வைத்துள்ளது, சமூக-பொருளாதார வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளியுள்ளது. ஏழை நாடுகளின் நிலைமையை கடுமையாக மோசமாக்கியுள்ளது’ என்றார். மேலும் சர்வதே நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களான அமெரிக்காவின் ஆண்டனி  பிளிங்கன், பிரான்ஸின் கேத்தரின் கொலோனா, சீனாவின் கின் கேங், ஜெர்மனியின்  அன்னலேனா பியர்பாக், இங்கிலாந்தின் ஜேம்ஸ் கிளாவர்லி ஆகியோரும் கலந்து  கொள்கின்றனர்.

மேற்கண்ட ஆலோசனை கூட்டத்திற்கு மத்தியில், ரஷ்யா – இந்திய வெளியுறவு அமைச்சர்கள் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கிறார்கள். உக்ரைன். ஆப்கானிஸ்தானின் நிலைமை, ஆசிய-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குதல் போன்றவை குறித்து விவாதிப்பார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.