திண்டுக்கல் : தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தினால் பெண்கள் உயர்கல்வி படிக்கும் சதவீதம் அதிகரித்து உள்ளது என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மற்றும் களப்பணி ஆற்றல் நிகழ்ச்சி நடந்தது. காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் விசாகன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கல்வி தரத்தினை உயர்த்திட தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
தற்போது அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த களப்பயணம் என்ற திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார்கள். இங்கு பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் வருகை தந்துள்ளீர்கள். இங்கு வருகை தந்துள்ள பல மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வருவது இது முதல் முறையாக கூட இருக்கும். கல்லூரிக்கு சென்று பார்ப்பதன் மூலம் உயர் கல்வி பயிலும் விழிப்புணர்வு அதிகரிக்கும். பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார்கள்.
இதன்மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவியர் உயர்கல்வி படிக்க மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் உயர்கல்வி படிக்கும் சதவீதம் மிகவும் அதிகரித்து உள்ளது. கல்லூரிகளில் ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனி துறைகள் இருக்கும். அத்துறைகளுக்கு துறை தலைவர்கள், பல்வேறு பேராசிரியர்கள் இருப்பார்கள். இவைகளை பார்க்கும் போது நாம் இதுபோன்று உயர்கல்வி பயில வேண்டும் என்ற எண்ணம், உந்துதல் கிடைக்கும். நீங்கள் என்ன உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதையும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயில என்னென்ன படிப்புகள் உள்ளது, வேலை வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்த கையேடுகள் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உங்களுக்கு உயர்கல்வி வழங்க பல்வேறு பயிற்சிகளை வழங்கிடவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்ளத்தனையது உயர்வு என்பதை போல நாம் என்ன நினைக்கிறோமோ அதன்படியே நாம் உயர்ந்து வருவோம். உங்களால் முடியும் என முயற்சி செய்து உயர்வடைய வேண்டும்.
தமிழக அரசும் உயர்கல்வி பயில பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவைகளை நீங்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்களுக்கு எவ்வகையான பயிற்சிகள் தேவை என்பதை அறிந்து மாவட்ட நிர்வாகம் உங்களுக்கு உதவி செய்யும். முயற்சி கட்டாயம் வெற்றி தரும். நீங்கள் சிறப்பான முயற்சியை மேற்கொண்டு உயர்வடைய வேண்டும், உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்திட சிறந்த கல்வியாளர்களாக உயர்ந்திட வேண்டும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், காந்திகிராமம் கிராமியபல்கலைக்கழகம் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகமணி, கல்வி இயக்குநர் உதயக்குமார், பேராசிரியர் பாஸ்கரன், வேலைவாய்ப்பு பணியக இயக்குநர் ராமநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன், நாட்டு நலப்பணி திட்டம் மாவட்ட தொடர்பு அலுவலர் சவுந்தரராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.