இந்தூர்,
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கடந்த சில தினங்களாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறியதாவது;-
“இந்த தொடரில் சில சமயம் நாங்கள் நல்ல நிலையில் இருந்தும், அதை சாதகமாக்கி முன்னெடுத்து செல்ல முடியவில்லை. குறிப்பாக டெல்லி டெஸ்டின் 2-வது இன்னிங்சில் திட்டமிடலுக்கு ஏற்ப செயல்படாததால் ஆட்டம் கைநழுவிப்போனது.
இந்த டெஸ்டில் அந்த தவறுகளை திருத்திக்கொள்வோம் என்று நம்புகிறோம். எதிரணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து சிறந்த ஸ்கோரை குவிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அது தான் முக்கியம்.
இந்தியாவில், இன்னிங்சை தொடங்குவது அனேகமாக உலகின் வேறு எந்த இடத்தையும் விட கடினமாகும். 30-40 பந்துகளை எதிர்கொண்டு விட்டால், அதன் பிறகு ஆடுகளத்தை ஓரளவு கணித்து விடலாம். முதல் இரு டெஸ்ட் போட்டிக்குரிய ஆடுகளம் போன்றே இந்தூர் ஆடுகளமும் வறண்டு காணப்படுகிறது.”
இவ்வாறு அவர் கூறினார்.