மதுபான ஊழல் வழக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதேபோல், பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சரான சத்யேந்திர ஜெயினும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருவரது ராஜினாமாக்களையும் முதல்வர் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. புதிய கொள்கையின்படி மதுக்கடை உரிமையாளர்கள் தாங்களே விலையை நிர்ணயித்து கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு இலவசங்களை வழங்கவும், வீடுகளுக்கு மதுபானங்களை நேரடியாக விநியோகம் செய்யவும் அதிகாலை 3 மணி வரை கடைகளை திறந்திருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தச் சூழலில் புதிய மதுபானகொள்கையின்படி மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியது உட்பட பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், டெல்லி துணைநிலை கவர்னர் சக்சேனாவிடம் அறிக்கை அளித்தார். அதன்பேரில் சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை கவர்னர் பரிந்துரை செய்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது. இதன்தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார்.பின்னர் நீதிபதி நாக்பால், சிபிஐ கோரியபடி மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதன்படி மார்ச் 4-ம் தேதி வரை சிசோடி யாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சிசோடியா கைதை கண்டித்து தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று முன்தினம் போராட்டங்களை நடத்தினர்.