மதுரை: நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசிடம் 23.8.2022-ல் அறிக்கை அளித்தது. அந்த விசாரணை அறிக்கையில், தன்னை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு தடை விதிக்கவும், அந்த கருத்துக்களை பயன்படுத்தவும், அந்த கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் தடை விதிக்கக்கோரி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்பான அறிக்கைக்கும், அதை பயன்படுத்தவும் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேரில் ஆஜராகி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கள் குறித்த கருத்துகளைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும் அவர் கூறுகையில், ”நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை அடிப்படையிலான சட்ட நடவடிக்கை ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது. இந்த சூழலில் விஜயபாஸ்கரின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட விவாதிக்கப்பட்டு பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இடைக்கால தடையை நீக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து நீதிபதி, விசாரணைக்காக அழைத்து, ”மனுதாரர் மீது குற்றம்சாட்டுவது எப்படி? எல்.கே. அத்வானி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் தான் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடையை நீக்க முடியாது. வழக்கில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறது. ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது. வேறு குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை் எடுப்பது குறித்து நீதிமன்றம் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. அடுத்த விசாரணை மார்ச் 24-க்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.