சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள தெனியமார் கிராமத்தை சேர்ந்தவர் துவாஷியா (45). இவரது மகள் ரிங்கி (11). கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தாயும் மகளும் இணைந்து தனது பண்ணை வேலைக்காக அருகே உள்ள வயல் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு தங்களுக்கு தேவையான மண்ணை துவாஷியா தோண்டிக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த பகுதியில் கூட்டமாக சில காட்டுப்பன்றிகள் கடந்து சென்றுள்ளன. மாடுகள் தான் செல்வதாக நினைத்து தனது பணியை துவாஷியா தொடர்ந்து செய்துள்ளார். அந்த நேரத்தில், திடீரென ஒரு காட்டுப் பன்றி துவாஷியாவின் 11 வயது மகளை தாக்க பாய்ந்துள்ளது. இதை கவனித்த தாய் துவாஷியா, குறுக்கே பாய்ந்து தாக்குதலை தடுத்து மகளை காத்துள்ளார்.
தொடர்ந்து மகள் மீது காட்டுப்பன்றி தாக்குதல் நடத்த விடாமல் தனது கையில் இருந்த கோடாரியுடன் போராடியுள்ளார். இந்த சண்டையின் போது காட்டுப்பன்றி தனது கூரிய தந்தங்களை கொண்டு தாயார் துவாஷியாவை தொடர்ந்து தாக்கியுள்ளது. இறுதியில் தனது கோடாரியால் காட்டுப்பன்றியின் கழுத்தில் குத்தி தாக்கி அதை வீழத்தினார்.
அதேவேளை, காட்டுப்பன்றியின் தாக்குதலில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த துவாஷியா சம்பவ இடத்திலேயே வீழ்ந்து மரணமடைந்தார். இந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு சில நிமிடங்களிலேயே அரங்கேறிய நிலையில், சத்தம் கேட்டு அங்கு திரண்ட கிராம மக்கள் துவாஷியாவின் உடலை மீட்டனர். மேலும், சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
துவாஷியாவின் உடல் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ.6 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரை கொடுத்து தாய் நடத்திய போராட்டத்தின் காரணமாக 11 வயது மகள் ரிங்கி எந்த காயங்களும் இன்றி உயிர் தப்பினார்.