அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பே ஜி20 நாடுகள் கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்பின் வருடாந்திர மாநாட்டு, கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் தலைமை ஏற்று நடத்தும். சுழற்சி முறையில் நடத்தப்படும் ஜி20 மாநாடு, கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்றது.
இந்தநிலையில் நடப்பு ஆண்டில் ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று நடத்துகிறது. வரும் செப்டம்பர் மாதம் இந்த மாநாடு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க இந்தியா முழுவதும் 200 நகரங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு தலைப்புகளில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்களும் நடைபெறுகிறது.
அந்தவகையில் ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் புது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் உடன் சந்திப்பை நிகழ்த்தினார். இருதரப்பு சந்திப்பின் போது, பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமானவரி ரெய்டு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஊடக நிறுவனமான பிபிசி, 2002ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை தயாரித்து இரண்டு பாகங்களாக வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு உள்ளிட்ட முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் அரங்கேறியது. இது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்தது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியில் இருந்த போது குஜராத் முதலமைச்சராக மோடி பதவி வகித்த போது இந்த கலவரம் நடைபெற்றது.
இந்த சம்பவத்துக்கு பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நரேந்திர மோடி தங்கள் நாட்டுக்கு வர தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் நரேந்திர மோடிக்கு பங்கு இருப்பதாக பிபிசி நிறுவனம் தயாரித்த ஆவணப்படத்தில் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து ‘India: The Modi Question’ என்ற ஆவணப்படத்தை ஒன்றிய அரசு தடைசெய்தது. மேலும் ஆவணப்படத்தை தயாரித்த பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையும் நடத்தப்பட்டது. அதற்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்தது.
இந்தநிலையில் தான் இந்தியாவிற்கு வந்துள்ள இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளருடன் இந்திய அமைச்சர் இன்று பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் அமைச்சர் ஜெய்சங்கர் பிரிட்டிஷ் ஒளிபரப்பாளர் இந்தியாவில் பொருத்தமான சட்டங்களுக்கு இணங்க வேண்டும் என்று கூறினார. இந்திய தலைமையின் கீழ் நடைபெறும் G20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, நாட்டில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் “தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை” கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் பிரிட்டிஷ் பிரதிநிதியிடம் கூறினார்.