சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார்.
தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். இரவு, திருமண விழாவில் பங்கேற்பதற்கு முன், டெல்லியில் பணியாற்றும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.
தொடர்ந்து, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை நேற்று சந்தித்து, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், ஊரக வளர்ச்சித் திட்டங்கள், கூடுதல் நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதன்பின், பிரதமர் நரேந்திர மோடியை மாலையில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியதாவது: தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இங்கு வந்தேன். அதன்பின் இன்று காலை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்து, மகளிர் சுயஉதவிக் குழு தொடர்பாக தமிழகத்துக்கு தேவையான 5 கோரிக்கைகளை வைத்துள்ளோம்.
மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை அவர் சென்னை வந்தபோது, தன்னை பார்க்கும்படி என்னிடம் கூறியிருந்ததால், நேரம் கேட்டிருந்தேன். நேரம் அளித்த நிலையில், அவரைச் சந்தித்தேன். அரசியல் எதுவும் பேசவில்லை. முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கலை தெரிவித்தேன். தமிழகத்தில் விளையாட்டு தொடர்பான விஷயங்களைக் கேட்டறிந்தார்.
முதல்வர் கோப்பைக்காக 15 விதமான விளையாட்டுப் போட்டிகளை ரூ.25 கோடி செலவில் நடத்துகிறோம் என்பதை தெரிவித்தோம். அடுத்த முறை ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை தமிழகத்துக்கு தரும்படியும், இந்திய விளையாட்டு ஆணையம் சென்னையில் அமைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்.
தொடர்ந்து, நீட் விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் பேசினேன். அவர் சில விளக்கங்களை அளித்தார். அப்போது நான், தமிழக மக்களின் மனநிலை இதுதான். அதைச் சொல்ல வேண்டியது கடமை என்றும், தொடர்ந்து திமுகவின் சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தேன். அவரும் என்னிடம் மனம்விட்டுப் பேசினார்.
எய்ம்ஸ் தொடர்பாக 2026 டிசம்பர் மாதம்தான் என்று தெரிவித்துள்ளனர். எனவே, அது தொடர்பாக நான் பிரதமரிடம் பேசவில்லை. தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் எதுவும் பேசவில்லை.
விளையாட்டு தொடர்பான கட்டமைப்புகள் குறித்து அவர் கேட்டறிந்தார். தமிழகத்தில் தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைப்பது தொடர்பாக தெரிவித்தேன். அப்போது அவர், அதை யார் பராமரிப்பது? அரசே பராமரிக்குமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். அதன்பின், அவர் முதல்வராக இருந்தபோது சந்தித்த பிரச்சினைகள் குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டார். எங்கள் கோரிக்கைகளை பிரதமர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.