புதுடெல்லி: இந்திய ரயில்வேயின் இளம் அதிகாரிகள் இனிமேல் 10 ஆண்டுகள் களப்பணியாற்ற வேண்டும். அவர்கள் நேரடியாக தலைமை அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்பட மாட்டார்கள் என்று ரயில்வே வாரியம் அறிவித்து உள்ளது. யுபிஎஸ்சி குரூப் ஏ தோ்வு மூலம் இந்திய ரயில்வே அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். புதிதாக தேர்வு செய்யப்படும் இளம் அதிகாரிகள் கூட தற்போது ரயில்வே தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்படலாம். தற்போது தலைமை அலுவலகத்தில் பணி அமர்த்தப்படும் முன்பு போதுமான கள அனுபவத்தை உறுதி செய்ய வசதியாக அவர்களை முதல் 10 ஆண்டு தலைமை அலுவலகம் தவிர மற்ற களப்பணிகளில் ஈடுபடுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: குரூப் ‘ஏ’ ரயில்வே அதிகாரிகள் போதுமான களப்பணி பெறுவதை உறுதி செய்வதற்காக, அவர்களின் பணியின் ஆரம்ப 10 ஆண்டுகளுக்கு தலைமை அலுவலகம் தவிர மற்ற இடங்கள் பணியமர்த்தப்பட வேண்டும். அவர்கள் அங்கு களப்பணியை ஆற்ற வேண்டும். இந்த பணியிட மாற்றம் ரயில்வேக்கு அதிக பலன் தரக்கூடியது. இது இளம் அதிகாரிகளை அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களுக்கு தயார்படுத்துகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.