புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் பட்டங்களை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பட்டமளிப்பு விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக அழைப்பிதழில் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தது.
ஆனால் அவர்கள் இருவரும் பங்கேற்கவில்லை. அழைப்பிதழில் பெயர் இல்லாத ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இதற்கு பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக துணைவேந்தருடன் மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாஜக எம்.எல்.ஏ- வை பலரும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் இதை எதையுமே கண்டுகொள்ளாத ஜிப்மர் இயக்குநர் பட்டங்களை தொடர்ந்து வழங்கினார்.