தமிழ்நாடு பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் பொன்.ராதாகிருஷ்ணன். கடந்த மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில் கட்சி பணிகளில் ஈடுபட்டுள்ளார். சமீப காலமாக பெரிதாக எங்கும் தலைகாட்டாத நிலையில் இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தமிழ்நாட்டில் அண்ணாமலை பரபரப்பாக அரசியல் செய்து வரும் நிலையில் பொன்னார் தற்போது சைலண்ட் மோடில் இருந்து வருகிறார்.
மக்களவை தேர்தல்
அடுத்த ஓராண்டில் மக்களவை தேர்தல் வரவுள்ள சூழலில் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. முன்னதாக இல.கணேசன், தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநர்களாக சென்று விட்டனர். இந்த வரிசையில் பொன்னாரும் இடம்பெறுவாரா? இல்லை மத்திய அமைச்சரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இவரது பின்னணி குறித்து பார்க்கலாம்.
காங்கிரஸ் குடும்பம்
காமராஜருக்கு நெருக்கமான காங்கிரஸ் குடும்பத்தில் மார்ச் 1, 1952ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர் பொன்.ராதாகிருஷ்ணன். காலப்போக்கில் அரசியல் ரீதியாக மாறுபட்ட பாதையில் பயணிக்க தொடங்கினார். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தேசத்தின் மீது மிகுந்த பற்று இருந்தது. இந்த சூழலில் 1980ஆம் ஆண்டு சுதந்திர தினம் இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.
ஆர்.எஸ்.எஸ் ஈடுபாடு
பொன்.ராதாகிருஷ்ணனின் தேசப்பற்றை கண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரும் வாய்ப்பு தேடி வந்தது. தனது சகாக்கள் உடன் அன்று தொடங்கிய அரசியல் பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1982ஆம் ஆண்டு மண்டைக்காடு பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சாதி, மதம் பார்க்காமல் பொன்.ராதாகிருஷ்ணன் உதவி செய்தது பலரது கவனத்தை ஈர்த்தது.
தனிப்பட்ட செல்வாக்கு
அதிலிருந்து கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறத் தொடங்கினார். இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் உடன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த சூழலில் இல.கணேசன் மூலம் பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு பொன்னாரின் செயல்பாடுகள் கட்சி தலைமையை பெரிதும் ஈர்த்தன.
மக்களவை எம்.பி
அதற்கு பலனாக 1991 மக்களவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. அதில் ஒரு லட்சம் வாக்குகளை பெற்று 3வது இடம் பிடித்தார். இருப்பினும் முதல் தேர்தலிலே பலரையும் ஆச்சரியப்பட வைத்தார். இதையடுத்து 1996, 1998, 1999, 2004 ஆகிய மக்களவை தேர்தல்களில் அடுத்தடுத்து போட்டியிட்டார்.
வாஜ்பாய் புகழாரம்
இதில் 1999ல் வெற்றி பெற்று முதல்முறை எம்.பி ஆனார். அப்போது நாட்டின் தென் முனையில் இருந்து பாஜக எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் என வாஜ்பாய் புகழாரம் சூட்டினார். பின்னர் 2009, 2014, 2019 ஆகிய மக்களவை தேர்தல் மற்றும் 2021 இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இதில் 2014ஆம் ஆண்டு இரண்டாவது முறை வெற்றி பெற்றிருந்தார்.
மத்திய இணை அமைச்சர்
2000 – 2003 காலகட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசின் இளைஞர் நலத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். 2003ல் நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சராக இருந்தார். 2014ல் பிரதமர் மோடி அமைச்சரவையில் தொழில்துறை, சாலை போக்குவரத்து, நிதித்துறை உள்ளிட்ட துறைகளின் இணை அமைச்சராக பதவி வகித்தார்.