மும்பை: மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் மொத்த விலை கிலோ ரூ.4-லிருந்து நேற்று முன்தினம் ரூ.2 ஆக குறைந்தது. இதனால் கோபமடைந்த அடைந்த விவசாயிகள் நாசிக் மண்டியில் வெங்காய ஏலத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெங்காயத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500 மானியமாக அரசு அறிவிக்க வேண்டும் எனவும், வெங்காயத்தை கிலோ ரூ.15 முதல் ரூ.20-க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் வெங்காய விவசாயிகள் சங்க தலைவர் பாரத் டிகோல் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஏக்நாத் ஹிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஷிடம் விரைவில் பேசுவதாக மாநில அமைச்சர் தாதா பூஷே உறுதியளித்தார். இதன்பின் வெங்காய விவசாயிகள் நேற்று காலை போராட்டத்தை விலக்கி கொண்டனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நேற்று வந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் வெங்காய மாலை அணிந்தபடியும், தலையில் வெங்காய கூடைகளை சுமந்தபடியும் வந்து, வெங்காய விலை வீழ்ச்சி பிரச்சினையை எழுப்பினர். இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, ‘‘மகாராஷ்டிரா மண்டியில் ஒரு விவசாயி 825 கிலோ வெங்காயத்தை, கிலோ ரூ.1-க்கு விற்பனை செய்தார். ஆனால் மண்டிக்கு கொண்டு வந்த போக்குவரத்து செலவு ரூ.826. விவசாயிகளின் வருமானத்தை இருட்டிப்பு ஆக்குவதாக அரசு உறுதியளித்தது. ஆனால், உண்மை இதுதான்’’ என கூறியுள்ளது.