சென்னை: ”நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் பாமக கூட்டணி என்ற வதந்தியை நம்ப வேண்டாம்; பாஜக உடன் கூட்டணி தொடர்பாக பேசவில்லை” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சேலத்தில் பாமக சார்பில் ‘மனம் விட்டுப் பேச வாருங்கள்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70-வது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேட்டூர் உபரி நீர் திட்டம் மூலம் 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் பணியில் பத்து சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட வேண்டும். தமிழகத்தில் நீர்பாசன திட்டத்துக்கு ரூ.1 கோடியில் நிறைவேற்றிட வேண்டும். இதற்கான நிதியை உலக வங்கி, வசதி படைத்த கோடீஸ்வரர்களிடம் இருந்து பெற்று திட்டம் நிறைவேற்ற வேண்டும்.
சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்பனை செய்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சேலம் மாநகராட்சி ஏற்காடு அடிவாரத்தில் குப்பைகள் கொட்டுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் விமான நிலையம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு 25 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக அறிவித்து, அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும், அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. பொது நிறுவனங்களை மத்திய அரசு தனியார்மயமாக்குவதாக அறிவித்துள்ள நிலையில், நிலக்கரி நிறுவனத்தை விற்க போவதாக தெரிவித்த நிலையில், எதற்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இந்த விஷயத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் நிறைவேற்ற மறுத்துவரும் நிலையில், கடந்த மூன்று மாதத்தில் 15 பேர் தற்கொலை செய்துள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு தமிழக ஆளுநர்தான் முழு பொறுப்பு. தமிழக அரசு நினைத்தால் 162 சட்டப்பிரிவை அடிப்படையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யலாம் என்கிறபோது, இதனை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை.
தமிழகத்தில் போதை, கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளது. திராவிட மாடல் என்று கூறிக் கொள்ளும் தமிழக அரசு, இளைஞர்களை போதை மயக்கத்தில் எப்போதும் வைத்துக் கொள்ளும் நிகழ்வை அரங்கேற்றியுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலில் கேலிக்கூத்து சம்பவம் நடந்துள்ளது. ஜனநாயகத்துக்கும், தமிழர்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முறைகேடுகளை தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் தமிழக மக்களுக்குத்தான் சொந்தம் என்ற சட்டத்தை அரசு உடனடியாக இயற்ற வேண்டும். தமிழகத்தில் மதுபான கடைகளை படிப்படியாக குறைப்பதாக உறுதி கூறிவிட்டு, ‘டாஸ்மாக்’ கடைகளில் உள்ள படிகளை குறைத்து, படியே இல்லாமல் மதுபான கடைகளை அரசு நடத்தி காட்டும் விந்தை நிகழும்.
மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் பாமக கூட்டணி என்ற வதந்தியை நம்பிவிட வேண்டாம். பாஜக உடன் கூட்டணி தொடர்பாக பேசவில்லை. தேர்தலுக்கு ஐந்து மாதத்துக்கு முன்பாக தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்போம். தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையிலான கூட்டணி கட்சியே உறுதியாக ஆட்சியை பிடிக்கும்” என்று அன்புமணி கூறினார்.