தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களுள் பெரும் பங்கு ஐயா வைகுண்டர் சாமிக்கு உண்டு. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக போராடியதுடன் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் நிறுவினார். இவரை அப்பகுதி மக்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக வணங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழா 04.03.2023 சனிக்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 04.03.2023 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு வரும் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்தவகையில் தற்போது தென்காசி மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.