முதல்வர் ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கார்கே, பரூக் அப்துல்லா பங்கேற்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் இன்று காலை மரியாதை செலுத்துகிறார். சென்னை அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார்.

மாலையில் நடக்கும் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்மல்லிகார்ஜுன கார்கே, பரூக்அப்துல்லா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்று, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் இன்று (மார்ச் 1) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திலும், தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், பெரியார் நினை விடத்துக்குச் சென்று, அங்கும் மரியாதை செலுத்துகிறார்.

பிறகு, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்குக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் வாழ்த்து பெறுகிறார். பிற்பகல் வரை அறிவாலயத்தில் இருக்கும் முதல்வர், தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து வரும் தொண்டர்களிடமும் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார்.

பின்னர், மாலை 5 மணிக்கு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டின்பேரில் நடைபெறும்பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

முக்கிய தலைவர்கள் பங்கேற்பு: இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரும் முதல்வரை வாழ்த்தி பேசிய பிறகு, நிறைவாக முதல்வர் ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் என்பதால், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இல்லம், அண்ணா அறிவாலயம், பொதுக்கூட்டம் நடைபெறும் ஒய்எம்சிஏ மைதானம் ஆகியவை விழாக்கோலம் பூண்டுள்ளன.

முதல்வர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திமுக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வருக்கு வாழ்த்து சொல்லவும், அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் தொண்டர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், இதற்கான ஏற்பாடுகளை திமுக தகவல் தொழில்நுட்ப அணி செய்துள்ளது.

வாழ்த்து தெரிவிக்க… கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் அனைவரும் ‘07127191333‘ என்ற எண்ணில் அழைத்து, தங்கள் வாழ்த்துகளை பதிவு செய்யலாம். இந்த எண் நாளை (மார்ச் 2) நள்ளிரவு வரைசெயல்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

அதேபோல, www.selfiewithCM.com என்ற இணையதளத்துக்கு சென்று, க்யூஆர் கோடு வடிவத்தை ஸ்கேன் செய்தால், மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் முதல்வருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம். அந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரும் ‘07127191333‘ என்ற எண்ணில் அழைத்து, முதல்வருக்கு தங்கள் வாழ்த்துகளை பதிவு செய்யலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.