`மும்பையில் ஆபத்தான நபர்’ – அலர்ட் கொடுத்த ஏஜென்சி; குடும்ப பிரச்னைக்குப் பழிவாங்கினாரா சீன மனைவி?

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சீனா, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற மிகவும் ஆபத்தான தீவிரவாதி ஒருவர் மும்பைக்குள் நுழைந்திருப்பதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி மும்பை போலீஸாரை உஷார்படுத்தியிருந்தது. `சர்ஃபரா’ என்ற அந்த நபரின் புகைப்படம், பாஸ்போர்ட் விபரங்கள் அனைத்து விமான நிலையங்களுக்கும் வழங்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சந்தன்நகரில் வசிப்பது தெரியவந்தது.

உடனே மத்திய பிரதேச போலீஸார் அவரையும், அவரின் பெற்றோரையும் விசாரணைக்காக பிடித்துச்சென்றிருக்கின்றனர். அவர் பிடிபட்ட விபரம் மும்பை போலீஸாருக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே மும்பை போலீஸார் இந்தூர் சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த நபர் இதற்கு முன்பு 2005-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டு வரை சீனா மற்றும் ஹாங்காங்கில் வேலை செய்திருக்கிறார். அப்போது சீனாவில் ஒரு பெண்ணை பார்த்து திருமணமும் செய்து கொண்டார். அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதால் சீனா கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

போலீஸ்

என் மனைவியும், தன் மனைவியின் வழக்கறிஞரும் தான், தன்னைப்பற்றி இந்திய உளவுத்துறைக்கு தவறான தகவலை கொடுத்திருக்கிறார் என்று போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்துப் பேசிய இந்தூர் போலீஸ் துணை கமிஷனர் ரஜத், “ சர்ஃபரா தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும், அவர் சொல்லும் காரணங்கள் உண்மையா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். அவரின் பாஸ்போர்ட் விபரங்களை ஆய்வு செய்த போது அதில் பாகிஸ்தான் சென்றதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அவர் எங்கெல்லாம் சென்றார் என்பது குறித்து அவரின் சோஷியல் மீடியா கணக்கையும் ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

இரண்டு நாள்களாக மும்பையை பதற்றத்துக்கு உள்ளாக்கிய நபர் பிடிபட்டிருப்பது மக்களை நிம்மதியடையச் செய்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.