லாரி மீது கார் மோதல் 5 பெண்கள் பரிதாப பலி: பரமத்திவேலூர் அருகே சோகம்

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அருகே சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 5 பெண்கள் பலியாகினர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோர்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (45). இவர், சென்னை தாம்பரத்தில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா (43). கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றனர். இந்நிலையில் கடந்த 26ம் தேதி திருச்சி வீரப்பூரில் உள்ள பொன்னர்- சங்கர் கோயில் விழாவுக்கு ரவி, மனைவி கவிதா, மாமியார் கந்தாயி (65), அதே பகுதியைச் சேர்ந்த குஞ்சம்மாள்(65), சாந்தி(40), மகாலட்சுமி (எ) சுதா(35), கவிதா தம்பியின் குழந்தை தக்‌ஷனா(4) உள்ளிட்டோர் சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு வேடபரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு புறப்பட்டனர். இவர்களில் ரவி, கவிதா, கந்தாயி, குஞ்சம்மாள், சாந்தி, மகாலட்சுமி, தக்‌ஷனா ஆகிய 7 பேர் ஒரு காரிலும், மற்ற உறவினர்கள் வேனிலும் திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ரவி ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த படமுடியாபாளையம் தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நிறுத்திருந்த  கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. கவிதா, கந்தாயி, குஞ்சம்மாள், மகாலட்சுமி ஆகியோர் அங்கேயே உயிரிழந்தனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சாந்தி இறந்தார். படுகாயமடைந்த ரவி, குழந்தை தக்‌ஷனா ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.