சென்னை: நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்தது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்தார்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் போலியாக டாக்டர் பட்டம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அமைப்பு சார்பில் சில நாட்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், கஜராஜ், நடன இயக்குனர் சாண்டி, ஈரோடு மகேஷ், நடிகர் வடிவேலு, யூடியூப்பில் பிரபலமான கோபி , சுதாகர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த டாக்டர் பட்டத்திற்கும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” அண்ணா பல்கலைக்கழக பெயரில் போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது தொடர்பாக காவல் துறையில் புகாரளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதியை ஏமாற்றி, அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றி உள்ளனர். ஆளுநர் செயலாளர், உயர்கல்வித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகையும் , அரசும் அறிவுறுத்தியுள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.