விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியை சேர்ந்தவர் ராணி. இவருக்கு ராஜா என்பவருடன் திருமணமாகி (தம்பதியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது), 19 வருடங்கள் ஆகும் நிலையில், 18 மற்றும் 16 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜா கடந்த 7 வருடமாக சவுதியில் பணி செய்து வந்துள்ளார். இதன் இடைப்பட்ட காலத்தில் ராணிக்கும், அதே பகுதியை சேர்ந்த டிரைவரான முபாரக் என்பவருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 15 நாள்களுக்கு முன்பாக ராஜா சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனால், முபாரக் உடனான பழக்கத்தை ராணி தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முபாரக், கடந்த 20-ம் தேதி தனது முகநூல் பக்கத்தில் ராணியின் புகைப்படத்தை பாலியல் ரீதியாக தொலைப்பேசி எண்ணுடன் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை முகநூலில் பார்த்த பலர், தவறான நோக்கத்தோடு ராணியை தொடர்புகொண்டு துன்புறுத்தினராம். இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு உள்ளான ராணி, இதுகுறித்து முபாரக்கிடம் கேட்டபோது… தவறான வார்த்தைகளால் திட்டிய அவர், கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இவரால், பாதிக்கப்பட்ட ராணி கடந்த 21-ம் தேதி செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், முதற்கட்டமாக டி.எஸ்.ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த செஞ்சி போலீஸார் முபாரக்கை அதிரடியாக கைது செய்துள்ளனர்.