ஸ்டாலின் பேரை கேட்டதும் பயம்; ஸ்கூல் அட்மிஷன் கூட கிடைக்கல… கருணாநிதி விட்ட பளார்!

தமிழ்நாடு முதல்வரும்,
திமுக
தலைவருமான
மு.க.ஸ்டாலின்
இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க வாகனங்களில் அணிவகுத்து உடன்பிறப்புகள் சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்

இன்று காலை
பெரியார்
, அண்ணா, கலைஞர்
கருணாநிதி
ஆகிய மூவரின் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் சிறு வயதில் பள்ளி சேர்க்கையின் போது பட்ட சிரமங்கள் குறித்து Behindwoods யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியை நீயா நானா புகழ் கோபிநாத் எடுத்திருக்கிறார். இதில் பேசுகையில், பெரிய தலைவரின் பெயரை எனக்கு வைத்ததால் மிகவும் பெருமை அடைந்தேன்.

தொடக்கப் பள்ளி சேர்க்கை

ஆனால் பள்ளியில் சேர்க்கும் போது மிகுந்த சிரமம் ஏற்பட்டது. என்னையும், என் தங்கை தமிழ்செல்வியையும் இருபாலர் படிக்கும் பள்ளி ஒன்றில் சேர்க்க முடிவு செய்தனர். இதற்கான பொறுப்பை முரசொலி மாறன் தான் எடுத்துக் கொண்டார். அட்மிஷன் வாங்கி விட்டார். இதையடுத்து பள்ளியில் சேர்ப்பதற்காக அழைத்து சென்றார். அப்போது பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், பெயர் ஸ்டாலின் என்றுள்ளது.

கருணாநிதி சொன்ன பதில்

ரஷ்யாவில் தற்போது பெரிய பிரச்சினை சென்று கொண்டிருக்கிறது. எனவே பெயரை மட்டும் மாற்றி விட்டால் எங்களுக்கு வசதியாக இருக்கும். மாற்றிக் கொடுங்கள் எனக் கேட்டுக் கொண்டனர். உடனே முரசொலி மாறன் நேராக கருணாநிதியிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு, பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேன். பெயரை மட்டும் மாற்றவே மாட்டேன் என தெரிவித்துவிட்டார்.

மாண்டிச்சோரி பள்ளியில் அனுமதி

இதனால் அந்த பள்ளியில் கடைசி வரை சேர்க்கவே முடியாமல் போய்விட்டது. பக்கத்து தெருவில் உள்ள மாண்டிச்சோரி பள்ளியில் சேர்த்தனர். நானும், என் தங்கை தமிழ்ச்செல்வியும் வேறு பள்ளியில் தமிழ் மீடியத்தில் படிக்க வேண்டியதாகி விட்டது என்று கூறினார். மேலும் ரஷ்யாவில் இருந்து தூதுவர்கள் யாராவது வருகை புரிந்தால் கருணாநிதி உடனே அழைத்து அவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பார்.

ரஷ்ய தூதுவர்கள்

இவர் தான் ஸ்டாலின் எனக் கூறுவார். அவர்கள் என்னை ஆச்சரியமாக பார்ப்பார்கள் எனவும் தெரிவித்தார். இதேபோல் மற்றொரு நிகழ்வும் அரங்கேறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின் ரஷ்யா சென்ற நிகழ்வை பகிர்ந்து கொண்டார். 1989ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

ரஷ்ய சுற்றுப்பயணம்

அப்போது விமான நிலையத்தில் இறங்கியதும் அவருடைய பெயரை கேட்டனர். அதற்கு ’ஸ்டாலின்’ எனக் கூறியுள்ளார். உடனே அங்கிருந்த பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். பின்னர் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தனர். தொடர்ந்து பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர். சில மணி நேரங்களுக்கு பின்னரே தன்னை ரஷ்யாவிற்குள் நுழையவே அனுமதித்ததாக குறிப்பிட்டார்.

ஏனெனில் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலினை பலருக்கு தற்போது பிடிப்பதில்லையாம். சோவியத் யூனியன் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மார்ச் 5, 1953ல் இறக்கிறார். அதற்கு 4 நாட்கள் முன்னதாக மார்ச் 1, 1953ல் மு.க.ஸ்டாலின் பிறக்கிறார். அதன்பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.