திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே செர்ப்புளசேரி பகுதியைச் சேர்ந்தவர் ரஷீத் (49). அந்த பகுதியில் உள்ள ஒரு அரபி பாடசாலையில் (மதரசா) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி அவரிடம் படிக்கும் ஒரு 15 வயது மாணவன் தேர்வில் சந்தேகம் கேட்பதற்காக அவரது அறைக்கு சென்றான். அப்போது ரஷீத் அந்தமாணவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் பாவரட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ரஷீதை கைது செய்தனர். இவ்வழக்கு குன்னம்குளம் அதிவேக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லிஷா, மதரசா ஆசிரியர் ரஷீதுக்கு 67 வருடம் கடுங்காவல் சிறையும், ₹80,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மத பாடசாலைகளிலும் கல்வி நிலையங்களிலும் மாணவர்களுக்கு பாதுகாவலராக இருக்க வேண்டியவர்களே இது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது என்றும் அவர்களுக்கு எந்த கருணையும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.