2023- 2024ம் நிதியாண்டில் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி கிடையாது என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், நடப்பு 2022- 2023ம் நிதியாண்டில் வருமான வரிச் செலுத்துவோர் சலுகைகள் பெறுவது எப்படி? பழைய முறையைத் தொடரலாமா? அல்லது புதிய முறைக்கு மாறுவது சிறந்ததா? என விரிவாகப் பார்ப்போம்!
நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், பழைய முறை மற்றும் புதிய முறையில் வருமான வரிச் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பழைய மற்றும் புதிய முறை என இரண்டிலுமே ஆண்டுக்கு முதல் 2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. 2.5 லட்சம் முதல் 5.0 லட்சம் ரூபாய் வரை இரண்டு முறைகளிலும் 5% வரி விதிக்கப்பட்டுள்ளது.
பழைய வரி முறைப்படி, 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரி விதிக்கப்படுகிறது. ஆனால் புதிய முறையில் 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை 10% வரியும், 7.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 15% வரியும் விதிக்கப்பட்டுள்ளது. பழைய முறையில் 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்கள் 30% வரி செலுத்த வேண்டும்.
அதே நேரம், புதிய முறையில் அதனை 10 லட்சம் முதல் 12.50 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும், 12.50 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25% வரியும், 15 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு 30% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
வரிச் செலுத்துபவர்கள் இந்த இரண்டு முறையில் எதை வேண்டுமானாலும் தேர்வுச் செய்துக் கொள்ளலாம். ஆனால், பழைய வரி முறையில் வருமான வரிச் சட்டம் 80C, 80D உள்ளிட்டப் பிரிவுகளில் சேமிப்புகள், வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணம் உள்ளிட்டவைகளைக் காட்டி வரிச் சலுகைப் பெற முடியும்.
ஆனால் புதிய வரி முறையில் வரிச்சலுகைகள் எதுவும் கிடையாது. எனவே, அவரவர் வசதிக்கேற்ப வருமான வரியைச் செலுத்திக் கொள்ளலாம். பழைய முறையில் வருமான வரிச் செலுத்துபவர்கள், வரும் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.