வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக விராட் கோஹ்லி 22 ரன்கள் எடுத்தார். ஆஸி., வீரர் குனேமான் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் வென்ற இந்திய அணி 2-0 என்ற முன்னிலை பெற்றதுடன், தொடர்ந்து நான்காவது முறையாக ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி வென்ற அணி என சாதனை படைத்தது.
இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் இன்று (மார்ச் 1) இந்துாரில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் லோகேஷ் ராகுல், முகமது ஷமி ஆகியோருக்கு பதிலாக சுப்மன் கில், உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், கேமரன் கிரீன் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் துவக்கம் தந்தனர். குனேமான் பந்துவீச்சில் ரோகித் (12) ஸ்டம்பிங் முறையிலும், கில் (21) கேட்ச் முறையிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த புஜாரா (1), ஜடேஜா (4), ஸ்ரேயாஸ் ஐயர் (0) வரிசையாக வெளியேறினர்.
இதனால் இந்திய அணி 45 ரன்னுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனைத்தொடர்ந்து இணைந்த விராட் கோஹ்லி, பரத் ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்தது.
விராட் கோஹ்லி (22) அவுட்டானதும், மீண்டும் இந்திய பேட்டிங் சரியத் துவங்கியது. பரத் (17), அஸ்வின் (3), உமேஷ் யாதவ் (17), சிராஜ் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இந்திய அணி 109 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. அக்சர் படேல் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் குனேமான் 5 விக்கெட், லியான் 3 விக்கெட் வீழ்த்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement