4 மொழிகளில் தயாராகும் 'செவ்வாய்கிழமை'
தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற 'ஆர்.எக்ஸ் 100' படத்தை இயக்கிய அஜய் பூபதி இயக்கும் அடுத்த படம் செவ்வாய்கிழமை. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகிறது. செவ்வாய் கிழமையை அந்தந்த மொழியில் எப்படி உச்சரிப்பாளர்களோ அதுதான் அந்தந்த மொழிக்கான டைட்டில். தற்போது பான் இந்தியா படங்கள் தயாராகும் நிலையில் இந்த படத்தை பான் சவுத் இந்தியா படம் என்று அறிவித்தே தயாரிக்கிறார்கள். முத்ரா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் மற்றும் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் சார்பில் அஜய் பூபதி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
படத்தைப் பற்றி இயக்குநரும் தயாரிப்பாளருமான அஜய் பூபதி கூறியதாவது: 'செவ்வாய்கிழமை' கான்செப்ட் அடிப்படையிலான படம். இது இந்திய சினிமாவில் இதுவரை முயற்சி செய்யப்படாத வகையைச் சேர்ந்தது. படத்தைப் பார்க்கும்போது தலைப்பின் பின்னணியில் உள்ள நியாயத்தை தெரிந்து கொள்ளலாம். கதையில் மொத்தம் 30 கதாபாத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பெரிய அளவில் ஒரு குறிப்பிட்ட இடம் கதையில் உண்டு. படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் பொருத்தமானது மற்றும் முக்கியமானது. இது பான் இந்தியா படமல்ல. பக்கா பான் சவுத் இந்தியன் படம். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார் 'காந்தாரா' புகழ் பி.அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்கிறார். படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படுகிறது. 4 மொழியை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பார்கள். என்றார்.