விழுப்புரம் மாவட்டத்தில் 6ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அகலூர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (32). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் இருந்து அகலூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்திருந்த 12 வயதுடைய 6ஆம் வகுப்பு மாணவியை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் சென்று, செல்போனில் தவறான படங்களை காண்பித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு ராமமூர்த்தியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 6ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ராமமூர்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.